உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி பிரசாரம்- அமைச்சர் முத்துசாமி பேட்டி

Published On 2023-02-02 10:01 GMT   |   Update On 2023-02-02 10:01 GMT
  • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
  • பிரச்சாரத்திற்காக மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளதால் அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருமகன் ஈவெரா பொதுமக்களிடம், தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர் பொதுமக்களிடம் பழகும் விதம். அணுகும் விதம் அமைதியாக இருக்கும்.

குறுகிய காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் மேற்கொண்டார். நாங்கள் கடந்த 12 நாட்களாக வாக்கு சேகரிக்கும் போது பெண்கள் மிகவும் துயரத்துடன் திருமகன் மறைவை கூறி வேதனைப்பட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று கூறி வருகின்றனர்.

திருமகன் ஈவெரா நடவடிக்கையை முதலமைச்சர் சட்ட சபையில் நன்கு கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் உடனடியாக அன்று இரவு ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் எனக்கு போன் செய்து திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார்.

அப்போது திருமகன் ஈவெரா வசித்த கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா வீதி என்று பெயர் மாற்றினார். நாங்கள் நிச்சயமாக இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

நாளை தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News