உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் : மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2023-04-23 11:38 IST   |   Update On 2023-04-23 11:38:00 IST
  • சித்திரை திருவிழாவையொட்டி மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அபிராமி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
  • வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், இரவு சாமி சாட்டுதல் நடை பெற்றது. நேற்று காலை பானக்கம் பாலாபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு மேல் கொடி யேற்றம் நடைபெற்றது.

இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் கோவில் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை காலை பூச்சொரிதலும், பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலையில் பாலாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

28-ந்தேதி கரகம் ஜோடித்து மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். 29-ந்தேதி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மாலையில் சிறப்பு அலங்காரம் நடைபெறும். 30-ந்தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், இரவு வில்லிசை நடைபெறுகிறது.

மே 1-ந்தேதி மாலை அழகு போட்டு நகர்வலம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம், கரகம் விடுதல் மற்றும் இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

3-ந்தேதி மஞ்சள் நீராட்டுவிழா, 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் ஊஞ்சல் மண்டகப்படி, அதனைதொடர்ந்து 5-ந்தேதி மாலை தெப்பத்திருவிழா மற்றும் கோட்டைக்குளத்தில் தேரோட்டம் நடைபெறு கிறது.

இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தலைவரும், பரம்பரை அறங்காவலரு மான பாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News