கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க பூச்சி மருந்துடன் வந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க குழந்தைகள்- பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்த பெண்: கடலூரில் பரபரப்பு
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண்ணை போலீசார், சோதனை செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்த ஒரு பையில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது தெரிய வந்தது.
- 2முறை புகார் அளித்தோம். இது குறித்து போலீசார் எந்த விசாரணையும் நடத்தாமல் உள்ளனர். என்றார்,
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் நேரில் வந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணை சோதனை செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்த ஒரு பையில் பூச்சி மருந்து பாட்டில் இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணிடம் இருந்து பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் விசாரித்த போது குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை சேர்ந்த கலைச்செல்வி (வயது 33).என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது கூறியதாவது:- எனக்கும் தணிகாச்சலம் என்பவருக்கும் திருமணமானது. தற்போது எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதால் என்னையும் எனது குழந்தைகளையும் வெளியில் அனுப்பி விட்டார். திருமணத்தின் போது 7 பவுன் நகை, 10ஆயிரம் பணம் மற்றும் 2பசு மாடுகள் சீர்வரிசையாக கொடுத்தனர். எனது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு தராமல் உள்ளார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் 2முறை புகார் அளித்தோம். இது குறித்து போலீசார் எந்த விசாரணையும் நடத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நானும் எனது 3 குழந்தைகளும் நடுத்தெருவில் வசித்து வருகின்றோம். ஆகையால் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி எனது பொருட்களை மீட்டு தர வேண்டும் என கூறினார்.
. இதனை தொடர்ந்து கலைச்செல்வியை போலீசார் கடும் எச்சரிக்கை செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.