உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனையா?

Published On 2023-04-27 09:24 GMT   |   Update On 2023-04-27 09:24 GMT
  • அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
  • 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் செயற்கையாக கார்பைடு கற்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து, இயற்கையான முறையில் பழுத்த பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன என்பதை அதிகாரிகள் உறுதி செய்யுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஊட்டி பழ மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் அழுகிய நிலையில் இருந்த சுமார் 12 கிலோ மாம்பழங்கள், 5 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் 5 பழக்கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறும்போது, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் இதர பழங்களை உண்ணும்போது வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் பழ வியாபாரிகள் மீது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News