யானைகள் நடமாட்டம் உள்ளதால் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி கேட்டு மனு கொடுக்க வந்த மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.
யானைகள் நடமாட்டத்தின் அச்சத்தால் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி வேண்டும்
- சில நேரங்களில் யானைகள் மாணவர்களை விரட்டி வந்துள்ளது.
- மாணவ, மாணவிகளின் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 4 கி.மீ., தொலைவில் உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் தினமும் அடர்ந்த காட்டின் வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த காட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகள் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
சில நேரங்களில் யானைகள் மாணவர்களை விரட்டி வந்துள்ளது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். மேலும் எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, ரேஷன் கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே இவற்றையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உதவி கலெக்டரிடம், இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதியையும் நேரில் சென்று உடனே செய்து தர வேண்டும். அருகில் சென்று கொண்டிருக்கும் பஸ்சை இந்த கிராமத்தின் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.