உள்ளூர் செய்திகள்

சிறைகாவலுக்கு செல்லும் கைதிகள்

ஏற்காடு எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை:தண்டனை பெற்ற 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைப்பு

Published On 2023-04-26 08:12 GMT   |   Update On 2023-04-26 08:12 GMT
  • ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் சேட் (வயது 70). எஸ்டேட் அதிபர்.
  • உஸ்மான் சேட் மற்றும் அவரது மனைவியை மிரட்டி, 23 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஏற்காடு:

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் சேட் (வயது 70). எஸ்டேட் அதிபர். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி உஸ்மான் சேட்டின் மனைவி நிஷா, நாய்க்கு உணவு அளிப்பதற்காக வீட்டின் பின்புற கதவை திறந்தபோது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கும்பல் வீட்டிற்குள் புகுந்தது.

பின்னர் கத்தி மற்றும் இரும்பு ராடை காட்டி, உஸ்மான் சேட் மற்றும் அவரது மனைவியை மிரட்டி, 23 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது தொடர்பாக ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சாலைப்பாறை பகுதியை சேர்ந்த மணி (38), நாகலூரை சேர்ந்த சேகர் (57), மருதயன் காடு பகுதியை சேர்ந்த செல்வன் என்கிற செல்வகுமார் (41), வாழவந்தியை சேர்ந்த தங்கவேல், செங்காடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு வாழப்பாடி முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த மணி மற்றும் சேகர் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீப்பளித்தார். தங்கவேல் இறந்து விட்ட நிலையில், செல்வம், ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து தண்டனை பெற்ற 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News