உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு தாலி கட்டிய கல்லூரி மாணவர்

Published On 2022-10-11 07:35 IST   |   Update On 2022-10-11 07:35:00 IST
  • பள்ளி பருவத்தில் காதல் ஜோடிகள்பள்ளி சீருடையில் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.
  • அவர்களது பெற்றோரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சிதம்பரம் :

பள்ளி பருவத்தில் பிள்ளைகளின் காதலை பெற்றோர்கள் எப்போதுமே எதிர்ப்பது வழக்கம் தான். ஆனால் இந்த பள்ளி பருவ காதலில் சுற்றும் காதல் ஜோடிகள் சினிமா தியேட்டர், பூங்கா என பொழுது போக்கு இடங்களில் பள்ளி சீருடையில் வலம் வருவதை பார்த்திருக்கிறோம்.

அதற்கு எல்லாம் ஒருபடி மேலாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவிக்கு, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தாலி கட்டியுள்ளார். அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே உள்ள பயணிகள் நிழற்குடையில் சீருடையில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி ஒருவர் வந்து அமர்கிறார். அப்போது அங்கு வந்த கீரப்பாளையத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவியின் அருகில் அமர்கிறார்.

பின்னர், மாணவியின் கழுத்தில் அந்த மாணவர் தாலியை கட்டினார். அருகில் நின்ற மாணவியின் தோழிகள் சிலர் அவர்களுக்கு அட்சதையை தூவி வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பாா்த்து அதிர்ச்சியடைந்த சிதம்பரம் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த மாணவி மற்றும் மாணவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். மேலும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News