தருமபுரி வள்ளலார் திடலில் இன்று புத்தகத் திருவிழாவை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் சாந்தி, வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி மற்றும் பலர் உள்ளனர்.
100 அரங்குகளுடன் புத்தகத் திருவிழா
- விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார்.
- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புத்தக விற்பனை அரங்குகளை பார்வையிட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை 10 நாட்கள் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். தகடூர் புத்தக பேரவை செயலாளர் செந்தில் வரவேற்று பேசினார். செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனி–யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து புத்தக விற்பனை அரங்குகளை பார்வை–யிட்டார். பின்னர் அவர் புத்தகத் திருவிழாவுக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கி பேசினார்.
விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.20 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது போன்ற புத்தகத் திருவிழாக்களை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நல்ல முறையில் பயன்ப–டுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் படித்தால் குற்–றங்கள் குறையும். படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்துங்கள். உழைக்கும் காலத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்க–ணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்த–கங்கள் காட்சிப்ப–டுத்தப்பட உள்ளன. புத்தக கண்காட்சி நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும்.
நாள்தோறும் மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்-–சிறுமியர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகக் கூடிய இளை–ஞர்கள், இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் புத்தக அரங்குகள், சிறுதானியங்களுக்கான உணவு அரங்குகள், அரசின் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள், சிறுவர்கள் குழந்தைகள் விளையாடும் விதமாக தனி இடமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விழாவில் கூடுதல் கலெக்டர் தீபா விஸ்வேஸ்வரி, உதவி கலெக்டர் கீதா ராணி உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.