நெரிஞ்சிப்பேட்டை- பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
- கதவனை மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
- கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அம்மாபேட்டை:
காவிரியில் வெள்ளப்பெருக்கு அதிகமானதால் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டது.இதனால் மேட்டூரை அடுத்து செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றபடுகிறது. இதனால் நெரிஞ்சிப்பேட்டை கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கதவனை மின் உற்பத்தி நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
இதேபோல் கடந்த 16-ந் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரி ஆற்றில் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் நேற்று பிற்பகல் முதல் நெரிஞ்சிபேட்டை- பூலாம்பட்டிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த 8 நாட்களாக நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி கதவணை பாலம் வழியாக 8 கிலோ மீட்டர் சுற்றிச் சென்று வந்த நிலையில் தற்போது படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.