உள்ளூர் செய்திகள்

எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

Published On 2023-06-20 02:32 GMT   |   Update On 2023-06-20 02:32 GMT
  • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  • தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை :

தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நில சீர்திருத்த ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார். எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரி (கூடுதல் கலெக்டர்) வீர் பிரதாப்சிங், வணிக வரிகள் இணை ஆணையராக (நுண்ணறிவு) மாற்றப்பட்டார். சேலம் பட்டுவளர்ப்பு இயக்குனர் விஜயராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மேலாண்மை இயக்குனர் ஆசியா மரியம், சிறுபான்மையினர் நலன் இயக்குனராக மாற்றப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சகாமுரி, சேலம் பட்டுவளர்ப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு சிறு தொழிற்சாலைகள் கழக (டான்சி) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் விஜயகுமார், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுவர்ணா, டான்சியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன், தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். கால்நடைகள் பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணைச் செயலாளர் ரஞ்சித் சிங், நாகை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக (கூடுதல் கலெக்டர்) நியமிக்கப்பட்டார்.

கோவை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக (கூடுதல் கலெக்டர்) அலர்மேல்மங்கை, சேலம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக (கூடுதல் கலெக்டர்) மாற்றப்பட்டார்.

சிறுபான்மையினர் நலன் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமைச் செயல் இயக்குனருமான (முழு கூடுதல் பொறுப்பு) சுரேஷ்குமார், தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைமைச் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News