உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் நீர்வரத்து சீரான நிலையிலும் 5-வது நாளாக குளிக்க தடை

Published On 2024-12-16 11:57 IST   |   Update On 2024-12-16 11:57:00 IST
  • தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் சரி செய்யும் பணிகள் தீவிரம்.
  • தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்துள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு கரை புரண்டு ஓடியது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்க ளும் ஏற்பட்டது. மெயின் அருவி வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட ஆண் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் மழைப்பொழிவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக விழ தொடங்கி உள்ளது. மெயின் அருவி பகுதியில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணல் கற்கள், மரக்கிளைகள் நடைபாதை முழுவதும் ஆங்காங்கே சிதறி கிடந்ததால் அதனை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அருவி பகுதிகளை சுற்றி சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்ததால் அதனையும் சரி செய்யும் பணிகள் முழுமையாக நடைபெற்ற உடன் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருவிகளில் தண்ணீர் சீற்றம் குறைந்து மிதமாக விழத் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து இன்று 5-வது நாளாக குளிப்பதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

Tags:    

Similar News