உள்ளூர் செய்திகள்

பர்கூர் பேரூராட்சி, மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.05 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்

Published On 2022-09-21 14:58 IST   |   Update On 2022-09-21 14:58:00 IST
  • கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட் கலவை தரம் குறித்து ஆய்வு செய்தார்.
  • கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட, கூச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடங்களின் கட்டமான பணிகளை ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் 2022-23் ஆண்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கே.எஸ். கோவிந்தசெட்டி தெரு முதல் ஐயப்பன் கோயில் வரை ரூ.ஒரு கோடியே 47 லட்சம் மதிப்பில் பவர் பிளக் சாலை அமைக்கும் பணி, ரூ.ஒரு கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, கணேஷ் நகர் மற்றும் நேரலகோட்டை முதல் கோதியலகனூர் வரை தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், மத்தூர் ஊராட்சி ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல், சிமெண்ட் கலவை தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கொத்தகோட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் விவசாயி ஞானவேல் என்பவரது மாந்தோட்டத்தில் ரூ.ஒரு லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு சம உயர வரப்புகள், நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியார்களிடம் பணிகளின் விபரம் குறித்தும், பணி செய்த நாட்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

கண்ணன்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட, கூச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடங்களின் கட்டமான பணிகளை ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களின் வருகை குறித்தும், ஆசிரியர்களின் வருகை குறித்தும் தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். அதன்படி, நேற்று பர்கூர் பேரூராட்சி மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் ரூ.5 கோடியே 4 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நடந்து வரும் அரசு நலத்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாக வழங்க பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News