வங்கி ஊழியரின் வீட்டில் 15 பவுன் நகை- பணம் கொள்ளை
- இரவு தூங்கி கொண்டி ருந்தபோது திடீரென்று வீட்டின் கதவை தட்டுவதுபோல் சத்தம்கேட்டது.
- 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.90 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரத்தை அடுத்த எலுமிச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது63).
இவர் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு சாரதி என்கிற மகனும், ஜெயந்தி என்கிற மகளும் உள்ளனர்.
ஜெயந்திக்கு திருமணமாகி ஓசூரில் கணவருடன் வசித்து வருகிறார். சாரதி திருமணமாகி தன் தந்தை ராஜேந்திரடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஓசூரில் உள்ள ஜெயந்தி புதிய வீடு கட்டியுள்ளதால், புகுமனை விழா நடத்தினார். இதற்காக ராணி, சாரதி, அவரது மனைவி நித்தியகுமாரி ஆகியோர் நேற்று முன்தினம் ஓசூருக்கு செனறனர்.
வீட்டில் ராஜேந்திரன் மட்டும் தனியாக இருந்தார். நேற்று இரவு அவர் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று வீட்டின் கதவை தட்டுவதுபோல் சத்தம்கேட்டது. உடனே அவர் கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தபோது யாரும் இல்லை. உடனே அவர் வீட்டின் வெளியே சென்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் வந்தார்.
அப்போது பீரோ திறந்து கிடந்தது. அதில் 7 தங்க செயின் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.1.90 லட்சம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டுவது போல் மர்ம நபர்கள் நடித்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.