வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை: மறுபரிசீலனை செய்ய நெல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
- தொடர்ந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து வந்தால், நெல் விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் சூழ்நிலை ஏற்படும்.
- இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று தமிழக நெல் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், மத்திய அரசு அரிசியை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ததை கண்டிக்கிறோம். உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா கண்டங்களுக்கு, மிக சன்ன அரிசியாக, பாஸ்மதி அரிசியாக, சன்னமற்ற அரிசியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.
தற்போது உலக அளவிலே அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு பல நாடுகளில் ஒரு கிலோ அரிசி ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. இந்த நிலையில் மத்திய அரசு, வெளிநாடு களுக்கு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ந்து ஏற்றுமதிக்கு தடை விதித்து வந்தால், நெல் விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் சூழ்நிலை ஏற்படும். இதனால் இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியா விலும் குறைவான விலைக்கு உணவுகள் கிடைக்கும். அதன்பிறகு மற்ற நாடுகளுக்கு என்ன நிலைமையோ, அதே நிலைமை தான் இந்தியா வுக்கு கட்டாயமாக வந்தே தீரும். எனவே, மத்திய அரசு உடனே அரிசி ஏற்றுமதி உண்டான தடையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்த கூட்டத்தில், மாநில மகளிரணி தலைவி பெருமா, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், வரதராஜ், கண்ணய்யா, மாவட்ட இளைஞரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அனுமந்தராசு, மாநில ஆலோசகர் நசீர்அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.