உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திருநங்கையிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்தபடம்.

கணவனுடன் சேர்த்து வைக்க கோரிகடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற திருநங்கை

Published On 2023-11-16 08:42 GMT   |   Update On 2023-11-16 08:42 GMT
வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

கடலூர்:

கடலூர் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவருக்கும் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.நட்பாக பழகிய இவர்கள், நாளடைவில் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது அந்த வாலிபர், வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.இதை நம்பிய வினோத்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரையும், காதலன் விருப்பத்திற்கு ஏற்ப வினோதினி என மாற்றிக் கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர், வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.மேலும் வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வினோதினி, அந்த வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, பாலூர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் கடந்த மாதம் 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் வினோதினி, ஊர் பஞ்சாயத்துக்கு புறப்பட்ட போது அந்த வாலிபரின் உறவினர்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் வினோதினியின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட வினோதினி, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பற்றி அறிந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News