உள்ளூர் செய்திகள்

சிங்கப்பெண்கள் நாங்கள்....

சேலத்தில் மல்லர் கம்பம் போட்டியில் அசத்திய கல்லூரி மாணவிகள்

Published On 2023-03-28 15:13 IST   |   Update On 2023-03-28 15:13:00 IST
  • உலகுக்கு அளப்பரிய கலைகளையும், வீர விளையாட்டுகளையும் வழங்கிய தமிழர்களின் நாகரிகமும், பழம்பெருமைகளும் இன்றும் போற்றப்படுகிறது.
  • தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், ‘மல்லர் கம்பம்’ விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர்.

உலகுக்கு அளப்பரிய கலைகளையும், வீர விளையாட்டுகளையும் வழங்கிய தமிழர்களின் நாகரிகமும், பழம்பெருமைகளும் இன்றும் போற்றப்படுகிறது. களரி, வர்மக்கலை, மல்யுத்தம்... வரிசையில் வீர விளையாட்டான மல்லர் கம்பமும் உடலுக்கும், மனதுக்கும் வலுசேர்க்கும் விளையாட்டாகும். தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், 'மல்லர் கம்பம்' விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர். தங்களின் பராக்கிரமச் செயலுக்கு வலுவேற்ற இந்த 'மல்லர் கம்பம்' அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந் திருந்தது.

சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தனர். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல் லவன் 'மாமல்லன்' என பெருமையோடு அழைக்கப்பட்டான்.

உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தும் மல்லர் கம்பமானது தமிழகத்தை கடந்து தற்போது வடமாநிலங்களிலும் சிறப்புற்று திகழ்கிறது. அங்கு மல்லர் கம்பத்தை 'மால்காம்' என்ற பெயரில் அழைக்கின்றனர். இது தேசிய உடல் விளையாட்டு போட்டியாகவும் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன.

மகாராஷ்டிராவில் எந்தவிழா தொடங்கப்பட்டாலும் இறை வணக்கத் துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் அரிதாகி வரும் அபூர்வ கலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. நம் மண்ணில் பிறந்த மல்லர் கம்பம், இன்று வடமாநிலங்களில் அதிகமாய் கற்பிக்கப்படும் வேளையில், தமிழகத்தில் இக்கலை தற்போது எழுச்சி பெறுகிறது.

கரணம் தப்பினால் மரணம் என்பது போல அந்தரத்தில் ஒரு பறவையை போல தொங்கி, உடலை ரப்பர் போல வளைத்து சாகசம் செய்யும் வீரமும் தைரியமும் நிறைந்து, பார்வையாளர்கள் கண் சிமிட்டக் கூட யோசிக்கும் அளவிற்கு சவாலான, அற்புதமான கலை மல்லர் கம்பம். அன்றைய சோழ ,பல்லவ மன்னர் காலத்தில் அதிகமாக விளையாடப்பட்ட விளையாட்டுகளில் மல்லர் கம்பம் முக்கியமானது ஆகும். "மல்" என்னும் சொல் "வளத்தை" குறிக்கும். மல்லன் என்றால் "வீரன்" என்று பொருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிலை மல்லர்கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர்கம்பம் என்று மூன்று வகையான மல்லர் கம்பம் உள்ளது. மாணவர்கள் மல்லர்கம்பம் பயில்வதால் உடல் வளைவு திறன் மேம்படுகிறது. பெண்கள் பயிற்சி பெறுவதால் அவர்களின் உடல் வலு பெறுவதோடு கர்ப்பகாலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். சேலம் சேலம் கோரிமேடு அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவிகள் மல்லர் கம்பம் மற்றும் யோகாசனம் செய்து அசத்தினர். அசுரவேகத்தில் மாணவிகள் நிகழ்த்திய இந்த சாதனை பலரையும் வியக்க வைத்தது. 

Tags:    

Similar News