மது போதை தகராறில் தொழிலாளியின் மர்ம உறுப்பை அறுத்தவர் கைது
- மாற்றுத்திறனாளி மணி (38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
காங்கயம் :
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 30). திருப்பூர் வேலம்பாளையம், படையப்பா நகரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்ல கடந்த12-ந் தேதி நள்ளிரவு 12 மணியளவில் கோவில்வழி பஸ் நிலையம் வந்தார். அப்போது மது குடித்து இருந்ததாக கூறப்படுகிறது.
அப்–போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அருண்பாண்டியை தாராபுரத்தில் இறக்கி விடுவதாக கூறி உள்ளார். இதையடுத்து இருவரும் ஸ்கூட்டரில் திருப்பூர் - தாராபுரம் சாலையில் தாராபுரம் நோக்கி வந்துள்ளனர். கொடுவாய் அருகே வந்த போது காட்டில் நிறுத்தி இருவரும் மது அருந்தியுள்ளார்கள். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அருண்பாண்டியின் மர்ம உறுப்பை அறுத்து விட்டு தப்பி சென்றார். இதையடுத்து அருண்பாண்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரை தொடர்ந்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியின் மர்ம உறுப்பை அறுத்து விட்டு தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவரும் சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி (38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அருண்பாண்டியின் மர்ம உறுப்பை மணி அறுத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து ஊதியூர் போலீசார் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.