உள்ளூர் செய்திகள்

டி.டி.வி.தினகரன். 

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை முழுமையாக வழங்க வேண்டும்- டி.டி.வி.தினகரன்

Published On 2022-12-30 13:12 IST   |   Update On 2022-12-30 13:12:00 IST
  • நிலுவை தொகையை கொடுக்காமல் ஏமாற்றி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • கரும்புக்கான தொகையையும் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி சர்க்கரை ஆலை நிர்வாகம் நடந்து கொள்கிறது.

தஞ்சாவூர்:

அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.100 கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காத நிலையில் விவசாயிகளை ஏமாற்றி வேறொரு நிறுவனத்திற்கு ஆலையை கைமாற்றும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் இப்போது ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவரின் பின்னணியோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்காமல் ஏமாற்றி ஆலையை அவர்கள் வசம் எடுத்து கொள்ள இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவசாயிகளை கடனில் சிக்க வைத்திருப்பதுடன் அவர்கள் ஆலைக்கு அளித்த கரும்புக்கான தொகையையும் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடந்து கொள்கிறது.

இது குறித்து தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த பிரச்சினையில் உண்மை என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கனவே ஒப்புகொண்டபடி நிலுவை தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News