உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

Published On 2023-03-26 03:03 GMT   |   Update On 2023-03-26 03:03 GMT
  • பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது.
  • தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை :

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருகிற 1, 2-ந் தேதிகளில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதால், நீதிமன்றத்தை நாடி உள்ளோம். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை போதாது. லண்டனில் இந்தியாவுக்கு எதிராக பேசியதால், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழக பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் எதிர்க்கட்சி தலைவர் போன்று செயல்படுகிறார். அவருக்கு இந்து மக்கள் கட்சி தோள் கொடுத்து செயல்படும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்களுக்கே வழங்குவதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டம் 6 மாதம் அமலில் இருந்தது. அப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதை விளக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டு நாடகம் நடத்துகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும்.அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சேர்ந்து தி.மு.க.வை வீழ்த்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். தென்மண்டல தலைவர் ராஜா பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News