உள்ளூர் செய்திகள்

தனியார் வங்கி முறைகேடாக வசூல் செய்தரூ.1.35 லட்சத்தை திருப்பி கொடுக்க உத்தரவு

Published On 2023-10-29 06:48 GMT   |   Update On 2023-10-29 06:48 GMT
அரியலூரில் வீட்டு கடனுக்காக தனியார் வங்கி முறைகேடாக வசூல் செய்த ரூ.1.35 லட்சத்தை திருப்பி கொடுக்க உத்தரவு

அரியலூர்,  

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவரின் மனைவி லலிதா(வயது 46). கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் தனியார் வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார்.

அந்த வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையிலிருந்து லலிதாவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி இன்சூரன்ஸ் செய்து கொடுத்திருந்தனர். கடன் தவணையை முறையாக செலுத்தி வந்த லலிதா கடந்த 2022ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிகளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீதமுள்ள தவணைகளை காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும். ஆனால் காப்பீடு நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்தவில்லை.

ஆனால் தனியார் வங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளனர். அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணைத் தொகையை செலுத்தி உள்ளனர்.

இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

இதில் தனியார் வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பெற்ற 11 தவணைத் தொகைகள் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 850-ஐ வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News