விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் - விவசாயிகள்
- அரியலூர் மாவட்டத்தில் விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் செங்கமுத்து, மாவட்டத்தில் யூரியா, காம்பளக்ஸ் போன்ற உரங்கள் அதிக விலைக்கு விற்கும் கடைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நத்தம் பட்டாக்களை கணினியில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசும்போது, அரியலூர் மாவட்டம் தூத்தூர் - தஞ்சாவூர் மாவட்டம்வாழ்க்கை இடையே கொள்ளிடத்தில் கதவணை கட்ட வேண்டும் என்றார்.மண்ணுழி செந்தில் பேசும்போது, வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் யூக்லிப்டஸ் மரங்களை நடுவதனால், வனவிலங்கு களுக்கு தேவையாக தீவனம்கிடைப்பதில்லை. இதனால், தங்களுக்கு தேவையாக உணவு பொருளை தேடி விளைநிலங்களுக்கு குரங்கு, பன்றி, மயில், காட்டு மாடு உள்ளிட்டவை வருகின்றன. இதனால் விளை பொருட்கள் சேதமடைகின்றன. எனவே, வனத்துறையினர் யூகலிப்டஸ்(தைல மரம்) மரங்கள் நடுவதை தவிர்க்க வேண்டும். விளை நிலங்களுக்கு வன விலங்குகள் வருவதை வனத்துறையினர் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பாண்டியன் பேசும்போது, மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதை தடை செய்ய வேண்டும். எள், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என்று பேசினார்.விவசாயிகளின் கோரிக்கை களை கேட்டறிந்த கலெக்டர் அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர்(பொ) பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை இயக்குநர் தீபாசங்கரி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.