தொழிற் சார்ந்த கல்வியை திட்டமிட்டு படிக்க வேண்டும் - இணை இயக்குனர் பேச்சு
- தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி கருத்தரங்கு
- மாணவர்கள் தொழிற்சார்ந்த கல்வியை தேர்வு செய்து, அதனை திட்டமிட்டு படித்தால் தொழில்முனைவோர்களாகி விடலாம்
அரியலூர்,
மாணவர்கள் தொழிற்சார்ந்த கல்வியை தேர்வு செய்து, அதனை திட்டமிட்டு படித்தால் தொழில்முனைவோர்களாகி விடலாம் என்று திருச்சி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் மு.சந்திரன் பேசி உள்ளார். அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி விழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை அவர் தொடக்கி வைத்து மேலும் பேசியது: இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுபவர்களின் கருத்துகளை மாணவ, மாணவியர்கள் நன்கு கூர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுடைய திறமைக்கேற்ப வேலை வாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் இணையதளத்தில் வேலைவாய்ப்பு தகவல்களை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளையும் மாணவர்கள் தேர்வு செய்திட வேண்டும். தொழிற்சார்ந்த தொழிற்கல்வியை தேர்வு செய்து, திட்டமிட்டு படித்திட வேண்டும். நேர்முக தேர்வுகளை ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் எதிர்கொள்ள வேண்டும். மேலும், வாசிக்கும் திறன்களை வளர்த்துக்கொண்டு, படிப்பு சார்ந்த புத்தகங்கள் மட்டுமல்லாமல் ஏனைய அறிவியல் மற்றும் தொழில்சார்ந்த புத்தகங்கள்,, பொது அறிவு புத்தகங்களை படித்து, தொழிற் முனைவோர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட தொழில் மையத்தினை அணுகி தங்கள் தேவைக்கேற்ப கடனுதவி பெற்று, தலைச்சிறந்த சுயதொழில் முனைவோர்களாக உருவாக்கிக்கொள்ள வேண்டும் என பேசினார். கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.