பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு பஸ் டிரைவர் தற்கொலை
- பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்
- சின்னதுரையின் மனைவி பாமா தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் சின்னதுரை (வயது 40). அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் வேலை செய்து வந்த நிலையில் நாகப்பட்டினம் பணிமனைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நாகப்பட்டினம் பணிமனையில் பணிகள் சேர்ந்த சின்னதுரை கடந்த மே 6-ம் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். சின்னதுரையின் மனைவி பாமா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்கு பதிவு செய்து சின்னதுரையின் பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து சின்னதுரை இறந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறார்.