உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை

Published On 2023-06-25 11:38 IST   |   Update On 2023-06-25 11:38:00 IST
  • ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்து 2 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போனது
  • தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் கருப்பாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் கருப்பாண்டவருக்கு பூஜை செய்து வருகின்றனர். மற்ற நாட்களில் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அந்த கோவில் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு உண்டியலை பக்கத்து வயலில் வீசிவிட்டு தப்பி சென்றனர்.

இன்று காலை அந்த பகுதியில் ஆடு மேய்க்க வந்தவர்கள் கோயிலின் கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே ஆண்டிமடம் சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் உண்டியலையும் மர்ம ஆசாமிகள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்ற தகவல் கிடைத்தது.இந்த கோவிலிலும் உண்டியலை பெயர்த்து எடுத்து வெளியே கொண்டு வந்து பணத்தை திருடி விட்டு கோவிலின் பின்பகுதியில் அந்த உண்டியலை வீசி உள்ளனர்.

இங்கு வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை அந்த கோவிலின் பூசாரி பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வார். இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும் இந்த கோவிலுக்கு வருகை தருவார்கள். ஆகவே உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்திருக்கும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்தும் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News