உள்ளூர் செய்திகள்

நுகர்வோருக்கு, தனியார் வங்கி ரூ.30 ஆயிரம் வழங்க உத்தரவு

Published On 2023-09-28 07:36 GMT   |   Update On 2023-09-28 07:36 GMT
  • கடன் தொகை கட்டி முடிந்தவருக்கு, மீண்டும் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி
  • அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள இரவாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). கடந்த 2020-ம் ஆண்டு இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் வங்கி கிளையை அணுகி ரூ.53 ஆயிரத்திற்கு வாகன கடன் வாங்கினார். வங்கி கூறியப்படி இதை வட்டியுடன் மாதம் ரூ.2,800 வீதம் 24 தவணைகளாக அவர் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2022-ம் வருடம் ஆகஸ்ட் 20-ந்தேதி, ரத்தினசாமிக்கு வங்கி தரப்பில் அனுப்பட்ட அறிவிப்பில் மொத்தம் 31 தவணைகள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகை 19 ஆயிரத்து 838 ரூபாயை, உடனடியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதே வருடம் அக்டோபர் மாதம் 10-ந்தேதி அன்று வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட மற்றொரு அறிவிப்பில் ரூ.20 ஆயிரத்து 708 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அனைத்து தவணைகளையும் செலுத்தி விட்ட நிலையில் இவ்வாறு அறிவிப்புகள் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரத்தினசாமி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் தமிழச்செல்வி மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் கொண்ட அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்தது.அதில் தனியார் வங்கி, ரத்தினசாமிக்கு 30 நாள்களுக்குள் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்றும், சட்டவிரோத வர்த்தக நடைமுறையைக் கடைப்பிடித்தற்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரமும், வழக்குச்செலவாக ரூ.5 ஆயிரமும் ரத்தினசாமிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News