உள்ளூர் செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் கருப்புசாமி சிலை கண்டெடுப்பு
- கொள்ளிடம் ஆற்றில் கருப்புசாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
- பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்று மணலில் இறங்கி நடந்து சென்ற போது, மணலில் புதைந்த நிலையில் கல் ஒன்று தென்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, சிலை போல தெரிந்துள்ளது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து, சிலையை முழுமையாக தோண்டி எடுத்தனர். அது ஒரு கை உடைந்த நிலையில் 2.5 அடி உயரம் கொண்ட கருப்புசாமி கற்சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிலை அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவிலில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் வந்து கருப்புசாமியை வழிபட்டு செல்கின்றனர்.