உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Published On 2022-07-20 14:11 IST   |   Update On 2022-07-20 14:11:00 IST
  • மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
  • விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு

 அரியலூர்:

அரியலூர் மாவட்ட மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்தனர். இதில் குழுமூரை சேர்ந்த விவசாயியான வேலாயுதம் அளித்த மனுவில், எனது நிலத்தில் அனுமதியின்றி 2 மின் கம்பங்களை நட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. எனவே மின்கம்பங்களை அகற்றுவதோடு, தவறான தகவல் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

காசாங்கோட்டையை சேர்ந்த மதியழகன் அளித்த மனுவில், என்னுடைய விவசாய மின் இணைப்புக்கு பகலில் 12 மணி நேரத்திற்கு பதிலாக 6 மணி நேரம் மட்டுமே முன்முனை மின்சாரம் கிடைக்கிறது. சரியான முறையில் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விளாங்குடி சமூக ஆர்வலர் தியாகராஜன் அளித்த மனுவில், தேளூர் பகுதியில் உயர் அழுத்த மின்கம்பிகளை ஏரியின் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் செயற்பொறியாளர் அறையில் இடநெருக்கடியுடன் கூட்டம் நடப்பதாகவும், அதை தவிர்த்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறும் கூட்டரங்கு போன்ற இடத்தில் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீபுரந்தானை சேர்ந்த விவசாய பிரதிநிதி பாண்டியன் அளித்த மனுவில், மாவட்டத்தில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். விவசாய மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அரியலூர் செயற் பொறியாளர் அய்யனார், பெரம்பலூர் செயற்பொறியாளர்(பொது) சேகர், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்."

Tags:    

Similar News