உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடியாக திகழ தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள்

Published On 2022-09-30 07:14 GMT   |   Update On 2022-09-30 07:14 GMT
  • நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடியாக திகழ தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • குறைதீர் ஆணைய நீதிபதி தெரிவித்தார்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினருக்கும், நில அளவை பதிவேடுகள் துறையினருக்கும் நுகர்வோர் சட்ட கல்வி பயிற்சி பட்டறை அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் இயன்ற வரை அனைவருக்கும் நுகர்வோர் சட்டக் கல்வி பயிற்சி நடத்துவது என்ற அடிப்படையில் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு அரசு அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வழங்கல் அலுவலகம் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள வருவாய்த் துறையினரும், நில அளவைகள் நில அளவை பதிவேடு துறையினரும் பொதுமக்கள் சேவை கட்டணம் செலுத்தி கேட்கும் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இதன் மூலம் நுகர்வோர் பிரச்சனைகள் வழக்குகளாக மாறக்கூடிய நிலை தவிர்க்கப்படும். கடந்த 6 மாதங்களில் அரியலூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு சில வழக்குகளில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது அரியலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் துறையினருக்கு எதிராக 15 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் அச்சட்டம் நீக்கப்பட்டு 1919 ஆம் ஆண்டு புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

புதிய சட்டத்தின்படி நுகர்வோர் ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்த தவறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு மாற்றப்பட்டன.

இவ்வாறு நிலுவையில் இருந்த வழக்குகள் 4 வழக்குகளை தவிர அனைத்தும் கடந்த ஆறு மாத காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் குறைந்தபட்சம் 90 நாட்கள் அல்லது அதிகபட்சம் 150 நாட்களில் தீர்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நுகர்வோரை பாதுகாக்க அரசு ஊழியர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டோர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட கல்வியை மேம்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரியலூர் மாவட்டம் நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News