இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த 2 பேர் கைது
- இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெயங்கொண்டம் அண்ணாநகரில் வசிக்கும் பாஸ்கர் மனைவி சந்திரா (வயது 47) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி 4 முதல் 5 பெண்களும், சில ஆண்களும் வந்து செல்வதாக அப்பகுதியினர் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவரது வீட்டில் சந்திரா உள்பட 5 பெண்கள் சில ஆண்கள் உள்ளே விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர்கள் தொடர்ந்து விபசார தொழில் செய்து வந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சந்திராவின் வீட்டிற்குள் சென்று சந்திரா மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் ரகுபிரசாத் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அவருடன் இருந்த மற்றவர்களை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு பகுதியில் நடந்து வந்த விபசார தொழில் தடுக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.