உள்ளூர் செய்திகள்

ஆரணி ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவிலில் 85 ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கொடிமரம் பிரதிஷ்டை

Published On 2023-05-11 18:50 IST   |   Update On 2023-05-11 18:50:00 IST
  • திருப்பணிகள் நடைபெற்றபோது கொடி மரங்களில் விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர்.
  • கொடி மரங்கள் பிரதிஷ்டைக்கு பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரும், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரும் என ஒரு கோவிலுக்குள் இரண்டு கொடி மரங்கள் உள்ளது என்பதே சிறப்பு ஆகும். பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரே 1938-ம் ஆண்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரே 1968-ம் ஆண்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.

இந்நிலையில், இக்கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து வர்ணம் பூசி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த கொடி மரங்களில் விரிசல் இருந்ததை கண்டுபிடித்தனர். எனவே, ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி திருக்கோவிலின் நிர்வாக குழுவினர் மாசர்ல ஹேமபூசனம் தலைமையில் கொடி மரங்கள் இரண்டையும் மாற்றி புதியதாக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். நேற்று காலை 10 மணிக்கு 85 ஆண்டுகளுக்குப் பின்னர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு எதிரிலும், 55 ஆண்டுகளுக்குப் பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமிக்கு எதிரிலும் இரண்டு புதிய கொடி மரங்கள் திருக்கோவிலின் அர்ச்சகர்கள் சுப்ரமணிய குருக்கள், நடராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பிரதிஷ்டை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாசர்ல ஹேமபூசனம், புவனகிரி வெங்கடேசன், கொல்லி கே.லீலாராம், முனி சந்திரய்யா, ஆண்டனி அசோக் மற்றும் திருக்கோவிலின் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Similar News