உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் காலை உணவு திட்டத்துக்கு மைய பொறுப்பாளர்கள் நியமனம்-கலெக்டர் அம்ரித் தகவல்

Published On 2023-05-14 14:37 IST   |   Update On 2023-05-14 14:37:00 IST
  • 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.
  • சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 2023-24 கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தி ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வரால், ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்குவதற்காக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வரின் காலை உணவு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது இரண்டு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பள்ளி சமையலறை மையங்களை நிர்வகிப்பதுடன், குழந்தைகளுக்கு காலை உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறுதல் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தகுதியுடைய சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இப்பணிக்கு தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மைய பொறுப்பாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அதே கிராம ஊராட்சியில், நகர்ப்புற பகுதியில் வசிப்பிடமாக கொண்டு வசிப்பவராக இருக்கவேண்டும்.காலை உணவை சமைப்பதற்கும், பரிமாறுவதற்கும் போதுமான அடிப்படை திறன் பெற்றிருக்க வேண்டும்.

சுய உதவிக்குழுவின் உறுப்பினரின் குழந்தைகள் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்ப டும் சுய உதவிக்குழு உறுப்பினரின் குழந்தைகள் 5-ம் வகுப்பை நிறைவு செய்யும் பட்சத்திலோ அல்லது அப்பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்றலாகும் பட்சத்தில் அவர் விடுவிக்கப்பட்டு வேறு உறுப்பினர் இப்பணியில் அமர்த்தப்படுவார்.சுய உதவிக்குழு உறுப்பினர் குறைந்தபட்சம் கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மகளிர் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ள முதன்மை தேர்வு குழுவால் தற்காலிக பணிக்கு தேர்வு செய்யப்படுவார். இப்பணி தற்காலிகமான, விருப்பபணி மட்டுமே. அரசு நிர்ணயம் செய்யப்படும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதர படிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.

இப்பணிக்கு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முதன்மை குழு உறுப்பினர்கள் மீதோ, இதர மக்கள் பிரதிநிதிகள் மீதோ, புகார்கள் ஏதும் வரப்பெற்றால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News