உள்ளூர் செய்திகள்

தனது குடும்பத்தினருடன் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய சின்னம்மாள்.

திண்டுக்கல் அருகே 100-வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

Published On 2023-09-11 15:10 IST   |   Update On 2023-09-11 15:10:00 IST
  • திண்டுக்கல் அருகே ஒரு மூதாட்டி இன்று தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புடை சூழ கேக் வெட்டி கொண்டாடிய அதிசய நிகழ்வு நடைபெற்றது.
  • அவரது மகன் தெரிவிக்கையில், எங்கள் தலைமுறையில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அம்மா மட்டுமே.

குள்ளனம்பட்டி:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இன்றைய நவீன உலகில் 60 வயதை கடந்து வாழ்ந்தாலே மிகப்பெரிய ஆச்சரியமான செயலாக உள்ளது. அதிலும் நோயற்ற முறையில் 100 வயது வாழ்வது என்பது எல்லோருக்கும் கிடைக்காது.

திண்டுக்கல் அருகே ஒரு மூதாட்டி இன்று தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புடை சூழ கேக் வெட்டி கொண்டாடிய அதிசய நிகழ்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டி மனைவி சின்னம்மாள் என்பவர்தான் இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்கள், மகன் மூலம் பேரன்கள், கொள்ளுப்பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் என 50க்கும் மேற்பட்டோருடன் இன்று சின்னம்மாள் தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

இது குறித்து சின்னம்மாளின் மகன் தெரிவிக்கையில், எங்கள் தலைமுறையில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அம்மா மட்டுமே. அவர் இன்னும் அவரது வேலையை தானாகவே செய்து கொள்கிறார். யாருடைய உதவியும் அவருக்கு தேவை இல்லை. இது தவிர வீட்டு வேலைகளையும் அவர் களைப்பின்றி செய்வதுடன் தோட்ட வேலைகளையும் செய்வார்.

அவரது காலத்தில் கம்பு, சோளம் உள்ளிட்ட உணவுகளையே அதிகம் சாப்பிட்டதாகவும் அதனால்தான் தனக்கு அதிக சக்தி உள்ளதாகவும் அடிக்கடி கூறுவார். மேலும் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்.

கண்ணாடி அணியாமலேயே அனைத்து வேலைகளையும் செய்வார். அவர் வயது வரை எங்களால் இது போல ஆரோக்கியமாக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் அவர் எந்த நோய்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று வைத்தியம் பார்த்தது கிடையாது. கசாயம் வைத்து தனது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொள்வார். அதனையே எங்களையும் சாப்பிடுமாறு அறிவுறுத்துவார்.

கொரோனா காலக்கட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு நோய் தொற்று அறிகுறி ஏற்பட்டது. அப்போது கூட எங்கள் அம்மா அனைத்து வேலைகளையும் சர்வசாதாரணமாக செய்து திடகாத்திரத்துடன் இருந்தார்.

தற்போது அவரது பிறந்தநாளை எங்கள் குடும்பத்தில் உள்ள 55 பேரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News