சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை: ராயபுரத்தில் 250 கால்நடைகளை பராமரிக்க நவீன வசதியுடன் மையம்
- ஜனவரி முதல் பிப்ரவரி வரை 400 கால்நடைகள் பிடிபட்டுள்ளது.
- 600 மாடுகளை பராமரிக்கும் வகையில் விரிவு படுத்தப்படும்.
ராயபுரம்:
சென்னையில் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டி தூக்கி வீசிய சம்பவங்களும் சமீபத்தில் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் பெண் ஒருவரை மாடு விரட்டி சென்று முட்டியது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூரில் ஓய்வு பெற்ற ராணுவவீரரை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசும் கண்காணிப்பு காமிரா காட்சி பார்ப்பவர்களை அதிர வைத்தது.
இதற்கிடையே சென்னை நகரப்பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் முறை மாடுகள் பிடிபட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என உயர்த்தப்பட்டுள்ளது.
2-வது முறை அதே மாடு பிடிபட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனினும் பல்வேறு இடங்களில் இன்னும் கால்நடைகள் வழக்கம்போல் போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன.
இது அண்ணா சாலை, ஈ.வி.ஆர் பெரியார் சாலை, ஜி.எஸ்.டி சாலை போன்ற முக்கிய சாலை, மதுரவாயல் முதல் கோயம்பேடு மார்க்கெட் வரையிலான 5 கி.மீ பகுதியிலும், சென்னை துறை முகத்தை நோக்கி செல்லும் லாரிகள் மற்றும் பேருந்துகள் செல்லும் பாதையிலும் மாடுகள் அடிக்கடி சுற்றுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அடைத்து பராமரிப்பதற்காக ராயபுரம் மண்டல அலுவலகம் அருகே நவீன வசதியுடன் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முதல் கட்டமாக 250 மாடுகளை பராமரிக்கும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது.
விபத்தில் கால் நடைகள் சிக்கினால் சிகிச்சை அளிக்கவும் தனி இடம் உள்ளது. சுத்தமான மற்றும் விசாலமான பகுதியில் மாடு களை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த பராமரிப்பு மையத்தின் முகப்பு பகுதி மற்றும் உட்புற பகுதியில் இயற்கை சூழல் படத்துடன் வர்ணம் பூசப்பட்டு து உள்ளது. இது பார்ப்பவர்களை கவர்ந்து உள்ளது. இந்த புதிய கால்நடை பராமரிப்பு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. வரும் மாதங்களில் இங்கு 600 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இடவசதி செய்யப்பட உள்ளது.
மேலும் போதிய இடவசதி இல்லாமல் மாடுகளை பராமரிப்பவர்களும் இங்கு தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பரமாரிக்க லாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக தினமும் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் அதற்கான செலவு குறித்து வரும் நாட்களில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பராமரிக்க ராயபுரத்தில் நவீன வசதியுடன் புதிய பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
250 கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்குள் 600 மாடுகளை பராமரிக்கும் வகையில் விரிவு படுத்தப்படும்.
சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் (2024) மொத்தம் 2,800 கால்நடைகள் பிடிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஜனவரி முதல் பிப்ரவரி வரை 400 கால்நடைகள் பிடிபட்டுள்ளது. 1500 உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களது மாடுகளை சுதந்திரமாக சாலையில் சுற்றித் திரிய அனுமதித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது என்றார்.