உள்ளூர் செய்திகள்

சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் பிளேடை விழுங்கியதாக கூறிய குற்றவாளி... மருத்துவமனையில் பரிசோதனை

Published On 2023-03-03 12:54 GMT   |   Update On 2023-03-03 12:54 GMT
  • ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
  • திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News