சாலையின் நடுவே எந்த வித தடுப்புகளும் இல்லாததால், வாகனங்கள் இருபுறமும் மோதி கொள்ளும் வகையில் செல்வதை படத்தில் காணலாம்.
பாலக்கோடு நகர பகுதியில் சாலையின் நடுவே பேரிகார்டு அமைக்கபடாததால் விபத்துகள் அதிகரிப்பு
- தற்காலிக பேருந்து நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளது.
- வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்தும் , ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு செல்வதற்கும், பாலக்கோடு நகரம் பிரதான மையமாக உள்ளது. தற்போது பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பேருந்து நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் புறவழிச்சாலை பகுதியில் அரசு மகளிர் பள்ளி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் சாலையை கடக்கும் சூழலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தக்காளி மார்க்கெட் பிரிவு சாலை, எம்ஜிரோடு பிரிவு சாலை, ஓசூர் புறவழிச்சாலை பிரிவு, பாப்பாரப்பட்டி சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகளை தடுக்க போலீசாரால் கண்காணிப்பு கேமரா மற்றும் தடுப்பு சுவர் (பேரிகார்டு) உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன.
தற்போது அனைத்து பேரிகார்டுகளும் பஸ் நிலையம் கட்டுமான பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தி வருவதால், அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதி யடைந்து வருகின்றனர். இது குறித்து தெரிந்தும் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.