உள்ளூர் செய்திகள்

குன்னூரில் புதுமாப்பிள்ளையின் உயிரை பறித்த காட்டெருமை

Published On 2023-10-24 09:17 GMT   |   Update On 2023-10-24 09:17 GMT
  • சாலையின் குறுக்கே ஓடிவந்ததால் விபத்து
  • திருமணம் ஆகி 10 மாதமே ஆவதால் குடும்பத்தினர் வேதனை

அருவங்காடு,

நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேன்ஸ் பகுதியில் வசித்து வருபவர் ராம் பகதூர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆகிறது.

இவர் பெட்போர்ட் பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். இரவில் ஓட்டலில் இருந்து உணவுப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இருசக்கர வாகனம் மூலம் பித்தாப்பூர் பகுதியை ஒட்டி உள்ள கோத்தகிரி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று ஓடி வந்தது. அதனை பார்த்த பிரேம்குமார் உடனடியாக பிரேக் பிடித்ததால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரது உடலை பரிசோ தித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மேல்குன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகி 10 மாதமே ஆன பிரேம்குமார் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News