தாய், தந்தையை வீட்டை விட்டு விரட்டிய மகன்
- 2 செண்ட் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கப்பட்டது.
- தாய், தந்தையை வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்கான் (வயது 65). இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: -
எனக்கு கடந்த 2010-ம் ஆண்டு மூத்த குடிமக்கள் சலுகையின்படி, அரசு சார்பில் 2 செண்ட் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கப்பட்டது.
அதில் வீடு கட்டி வாழ்ந்து வந்தோம். ஆனால் எனது மகன் தமிழ்குமரன், வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்குவதாகக் கூறி என்னிடம் கையெழுத்து வாங்கி, எனது மருமகள் பெயரில் வீட்டின் பட்டாவை மாற்றி விட்டார்.
பின்னர் என்னையும், எனது உடல் நிலை சரியில்லாத மனைவியையும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இதனால் நாங்கள் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வசித்து வருகிறோம்.
அங்கும் வசிக்கக் கூடாது என்று எனது மகன் அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே எனது மருமகள் பெயரில் உள்ள வீட்டுப் பட்டாவை ரத்து செய்து மீண்டும் எனது பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து பூங்கான் மேலும் கூறுகையில், முன்னாள் கலெக்டரிடம் 33 முறை இது குறித்து மனு அளித்தேன். தற்போது பொறுப்பேற்றுள்ள கலெக்டரிடம் இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளேன் என தெரிவித்தார்.