மலையில் வரலாற்று குழுவினர் ஆய்வு
- தமிழகத்திலேயே முதல் முதலாக 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய உழவுக்கு இரும்பை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
- அந்த கால மக்கள் இது மாதிரியான கற்கள் தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரியும் வகையில்தான், அந்த கற்களை நிறுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா ஐகுந்தம் அருகே மயிலாடும்பாறை உள்ளது. இங்கு தொல்லியல் ஆய்வில், தமிழகத்திலேயே முதல் முதலாக 4,200 ஆண்டுகளுக்கு முந்தைய உழவுக்கு இரும்பை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மயிலாடும்பாறையை சுற்றிலும் பல்வேறு தொல்லியல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் ஐகுந்தம் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் அண்ணாச்சி ஆகியோர், மலை மீது ஒரு கல் வித்யாசமாக இருப்பதாக கூறியதன் அடிப்படையில், அந்த இடத்தினை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
கிராமத்தில் இருந்து பார்க்கும் போதே மலைமீது ஒரு கல் வித்தியாசமாக தெரிந்தது.
மஜித்கொல்லஅள்ளி மலைமீது சென்றபோது தான், அது பெருங்க ற்காலத்துக்கு முன்னர் நினைவுச்சின்னங்களில் ஒன்றான தூக்கிவச்சான் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மயிலாடும்பாறை மலையடிவாரத்தில் பெருங்கற்கால கற்திட்டைகள் மற்றும் வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றது.
அந்த பகுதியிலேயே புதியகற்காலத்தைச் சேர்ந்த செங்காவி ஓவியங்களும் உள்ளன. பெருங்கற்படைக் காலத்தில் ஓரளவு ஒழுங்குபடுத்தப்பட்ட, துளையிடப்பட்ட, கற்பதுகைகள் அமைத்தவர்கள், அதற்கு முன்னர் புதியகற்காலத்திற்கும், பெருங்கற் படைகாலத்துக்கும் இடையில் இருந்தவர்கள்.
இருக்கும் கல்லை அப்படியே சிறுகற்கள் மீது நிறுத்தி இருக்கிறார்கள். அது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
இங்குள்ள கல் 7 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்டதாகவும், அடியில் மூன்று கற்கள் கொண்டு நிறுத்தப்பட்டும் இருக்கிறது.
அந்த கால மக்கள் இது மாதிரியான கற்கள் தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரியும் வகையில்தான், அந்த கற்களை நிறுத்தினார்கள்.
இது இப்பகுதியில் கண்டறியப்பட்ட மூன்றாவது தூக்கிவச்சான் கல் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால், பல தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதாம், அண்ணாச்சி ஆகியோர் உடன் இருந்தனர்.