கல்லாவி பஸ் நிலையத்தில் காட்சி பொருளான உயர் மின் கோபுர விளக்கு
- கல்லாவி பஸ் நிலையத்தில் காட்சி பொருளான உயர் மின் கோபுர விளக்கு சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள உயர் மின் கோபுர விளக்கு பயனற்று கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு, சில காலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மின் கோபுர விளக்கு பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை, இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் மூழ்கியுள்ளது. கல்லாவிக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் செல்லும் பகுதியில், மின்விளக்கு இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பொது மக்களும் இரவு நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. உடனடியாக உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.