புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையோர பூங்கா.
வத்தலக்குண்டுவில் சாலையோர பூங்கா அமைத்த கவுன்சிலர்
- ஆண்கள் பொது வழியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதால் நடந்து செல்ல பெண்கள் தயக்கம் காட்டினர்.
- பேரூராட்சி மன்ற 8-வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் சமூக ஆர்வலர்கள் உதவி யுடன் சாலையோர பூங்கா அமைத்த அதில் பசுமை நிறைந்த இயற்கை படங்கள் வரையப்பட்டு பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பஸ் நிலையம் பின்புறம் டென்னிஸ் கிளப் ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தது. அப்போது மது பிரியர்கள் மது அருந்திவிட்டு அந்தப்பகுதி சாக்கடையில் சிறுநீர் கழிப்பது பொதுவெளியில் மது அருந்துவது போன்ற சம்பவம் நடந்து கொண்டிருந்தது.
இதனால் பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நடந்து செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது தமிழக அரசு அந்தப் பகுதியில் இருந்த 2 டாஸ்மாக் கடையை அகற்றியதற்கு உறுதுணையாக இருந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
காந்திநகர் பகுதியில் சுமார் 5,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆண்கள் பொது வழியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதால் நடந்து செல்ல பெண்கள் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற 8-வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் சமூக ஆர்வலர்கள் உதவி யுடன் 200 அடி நீளத்திற்கு சாலை ஓரம் பூங்கா அமைத்து சுவற்றில் திருவள்ளுவர், சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பசுமை நிறைந்த இயற்கை படங்கள் வரையப்பட்டு பொன்மொழிகள் எழுதப்பட்டுள்ளன.
பல வண்ண பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கி சாலையோர பூங்காவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சக்தி கிளினிக் டாக்டர் தெய்வேந்திரன், தொழிலதிபர் திருமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் சாலையோர பூங்கா அமைப்பதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் 8 -வது வார்டு கவுன்சிலர் மணிவண்ணன் நன்றி கூறினார்.