உள்ளூர் செய்திகள்

கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 6 வயது சிறுமி பலி

Published On 2024-12-13 11:23 IST   |   Update On 2024-12-13 11:23:00 IST
  • 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து திடீரென இடிந்து விழுந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரமக்குடி:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பரமக்குடியில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு பரமக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இப்பகுதிகளில் அதிகளவில் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் உள்ளன. தொடர் மழையால் மண்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தன. இந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் பலியானார். அதன் விபரம் வருமாறு:-

பரமக்குடி அருகே மேலாய்க்குடி யாதவர் குடியிருப்பில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 6 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

பால்ராஜ் தனது குடும்பத்தினருடன் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜின் மகள் கீர்த்திகா மீது மண்சுவர் விழுந்தது. உடனே பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News