உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு - கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன்

Published On 2022-08-09 09:43 GMT   |   Update On 2022-08-09 12:43 GMT
  • சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.

இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

மேலும், கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Tags:    

Similar News