உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு 67 கிலோ கஞ்சாகடத்தல்

Published On 2022-11-25 14:42 IST   |   Update On 2022-11-25 14:42:00 IST
  • ஜீப்பில் ரகசிய அறைகள் அமைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
  • கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்துக்கு காரில் கஞ்சா கடத்துவதாக காளிகாவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கூடலூர்-மலப்புரம் சாலையில் செருதோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த ஒரு ஜீப்பை போலீசார் நிறுத்தினர்.போலீசார் மறித்ததை பார்த்ததும், அதில் இருந்த சிலர் ஜீப்பில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். தொடர்ந்து அவர்களை போலீசார் துரத்தி சென்றனர்.அதில் ஒருவர் மட்டுமே போலீசிடம் சிக்கினார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

பின்னர் ஜீப்பை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஜீப்பின் உள்ளே ரகசிய அறைகள் அமைத்து இருப்பதை கண்டனர். மேலும் இருக்கைகள் அடியிலும் அறைகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அறைகளை திறந்து பார்த்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த ரகசிய அறைகளில் 67 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிடிபட்ட நபரை காளிகாவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கூடலூர் மண்வயலை சேர்ந்த ஜஸ்டின்(வயது 28) என்பதும், அவர் ஆந்திராவில் இருந்து கர்நாடகா, கூடலூர் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News