4-ம் வகுப்பு மாணவி தற்கொலை: தந்தை படிக்க கூறியதால் விபரீத முடிவு
- சிறுமி பிரதிக்ஷா அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மாமியார் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார்.
- தந்தை படிக்குமாறு கூறி கண்டித்ததால் மனவேதனை அடைந்த பிரதிக்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், பெரிய குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரதிக்ஷா (வயது10). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சிறுமி பிரதிக்ஷா அருகில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மாமியார் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார்.
இதனை தந்தை கிருஷ்ணமூர்த்தி கண்டித்தார். மேலும் தேர்வு நேரம் என்பதால் வீட்டில் சென்று படிக்க வேண்டும் என்று கூறி வீட்டின் சாவியை கொடுத்து அனுப்பினார்.
பின்னர் கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அருகில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது மகள் பிரதிக்ஷா வீட்டு ஜன்னலில் துண்டில் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகளை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பிரதிக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை படிக்குமாறு கூறி கண்டித்ததால் மனவேதனை அடைந்த பிரதிக்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. 4-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.