நீலகிரியில் 456 சிறப்பு நிவாரண முகாம்கள்-சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
- குன்னூர் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
- பருவமழையை சமாளிக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குன்னூர்,
தமிழக சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் வந்திருந்தார். அப்போது கனமழை கொட்டியது. இருந்தபோதிலும் அவர் மழையில் நனைந்தபடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது குன்னூர் எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. அடுத்து பந்துமிரேலியா அணைக்கட்டு பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் நீலகிரி கலெக்டர் அம்ரித் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. எனவே பருவமழையை சமாளிக்கும் வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஜே.சி.பி. வாகனங்கள், மரங்களை வெட்டி அகற்றும் எந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தீயணைப்பு, வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
கனமழையால் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் பொதுமக்களை தங்கவைப்பதற்காக 456 தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.