உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் அருகே 4 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Published On 2024-12-30 12:43 IST   |   Update On 2024-12-30 12:43:00 IST
  • பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
  • உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா இருக்கூர், மாணிக்கநத்தம், கோப்பணம் பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளின் எல்லையில் பஞ்சபாளையம் பகுதியில் அமைந்துள்ள காலாவதியான கல்குவாரியில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்த தண்ணீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் நீர் ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில் இந்த நீர் நிலை தேக்கத்தில் பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவு நீரை கொண்டு வந்து தேக்கி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அப்பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நீர்நிலையை சுற்றியுள்ள இருக்கூர், மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம் ஆகிய 4 கிராமங்களில் 20-க்கும் மேற்பட்ட ஊர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் விவசாயத்தையும், கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நீர்நிலையில் சாக்கடை கழிவுநீரை கொண்டு வந்து தேக்கினால் இப்பகுதி நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடும். மேலும் விவசாய நிலமும் பாதிக்கும்.

எனவே சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என கூறி மாணிக்கநத்தம், இருக்கூர், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பஞ்சபாளையம் மெயின் ரோட்டில் இன்று காலை முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

Tags:    

Similar News