உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்த 31 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு

Published On 2023-05-18 07:35 GMT   |   Update On 2023-05-18 07:35 GMT
  • சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர்.
  • ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம்.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர். அப்படி வரும்போது சென்ட்ரல் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்பவர்களின் செயல் அறுவருக்கத்தக்கதாக உள்ளது.

50-க்கும் மேற்பட்ட முதியோர்கள், பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஊனமுற்றோர் உணவுக்காக பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் பிள்ளைகளால், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.

இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டீட் விஷன் என்ற தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து ரெயில்வே போக்குவரத்து போலீசார் பிச்சை எடுப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா, சூப்பிரண்டு பொன்ராமு ஆகியோர் முயற்சியால் 31 பேர் மீட்கப்பட்டு அவர்கள் தங்கும் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மாற்றுதிறனாளி, 8 பெண்கள் உள்பட 31 பேர் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஸ்டீட் விஷன் தொண்டு நிறுவனர் சீதாதேவி கூறியதாவது:-

சென்ட்ரல் ரெயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் யாசகம் கேட்கும் ஆதரவற்றவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம். அவர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்கப்படும். வேலை செய்ய விருப்பம் இருந்தால் வெளியில் போய் விட்டு திரும்பி இல்லத்திற்கு வந்து விடவேண்டும் என்றார்.

Tags:    

Similar News