உள்ளூர் செய்திகள்
ரெயில்

ரெயில்களில் அதிக ‘லக்கேஜ்’ எடுத்து சென்றால் தனி கட்டணம்- பயணிகளிடம் வசூலிக்க நடவடிக்கை

Published On 2022-06-03 13:39 IST   |   Update On 2022-06-03 15:25:00 IST
ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை:

ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு ‘லக்கேஜ்’ கொண்டு செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பயணத்திற்கும் ‘லக்கேஜ்’ கொண்டு செல்லும் அளவு மாறுபடுகிறது.

முதல் வகுப்பு ஏசி முதல் 2-ம் வகுப்பு சாதாரண படுக்கை வசதி வரை உள்ள பயணிகளுக்கு எத்தனை கிலோ ‘லக்கேஜ்’ கொண்டு செல்லலாம் என்று விதிமுறை உள்ளது.

ஆனால் அதனை இதுவரை ரெயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது ‘லக்கேஜ்’ அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெயில்களில் சமீப காலமாக ‘சங்கிலி’ இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், சக பயணிகள் சிரமப்படுவதை மனதில் வைத்து அதிக அளவு உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.

பயணத்தின் போது அதிக அளவு உடைமைகளுடன் பயணிக்க வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘உடைமைகள் அதிகமாக இருந்தால் பயணத்தின் போது இன்பம் பாதியாக இருக்கும். அதிக உடைமைகளை ஏற்றிக்கொண்டு ரெயிலில் பயணம் செய்ய வேண்டாம். உடைமைகள் அதிகமாக இருந்தால் பார்சல் அலுவலகத்திற்கு சென்று அதனை முன்பதிவு செய்யுங்கள் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் ரெயில்களில் அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

ஏ.சி. முதல் வகுப்பில் 70 கிலோ, ஏ.சி. 2-வது வகுப்பு 50 கிலோ, ஏ.சி. 3-வது வகுப்பு 40 கிலோ வரை ‘லக்கேஜ்’ எடுத்துச் செல்லலாம். 2-ம் வகுப்பு படுக்கை வசதி 40 கிலோ, பொது வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எடுத்து செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்

மேலும் யாரேனும் அதிக உடைமைகளுடன் பயணிப்பதை கண்டறிந்தால் தனி கட்டணத்தை அபராதத்துடன் செலுத்த வேண்டும். இது பயண தூரத்துக்கு ஏற்பமாறுபடும் என ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News