உள்ளூர் செய்திகள்
மழை

2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள 14 மாவட்டங்கள்

Published On 2022-06-03 13:29 IST   |   Update On 2022-06-03 13:29:00 IST
சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் 2 நாட்கள் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கீதா கூறியதாவது:-

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

5,6,7, ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் குமரிக்கடல் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேற்கண்ட நாட்கள் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News