உள்ளூர் செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-05-30 09:04 GMT   |   Update On 2022-05-30 09:04 GMT
போலீசார் சோதனையை மீறி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேன் கொண்டு சென்ற சம்பவம் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:

காட்பாடி அடுத்த எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் எர்த்தாங்கல் ஏரியில் மீன் பிடிக்க பொதுப்பணித்துறையில் ரூ. 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

ஆனால் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர் ஏரி எங்களுடைய பஞ்சாயத்தில் உள்ளதால் இந்த ஏரியில் மீன் பிடிக்கக்கூடாது எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் தான் மீன் பிடிக்க வேண்டும் என ஆறுமுகத்தை மீன்பிடிக்க விடாமல் தடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து ஆறுமுகம் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் மற்றும் திருவலம் போலீசில் புகார் செய்துள்ளார். இவரின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ஆறுமுகம் பிளாஸ்டிக் பாட்டிலில் ஒரு லிட்டர் பெட்ரோலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு கொடுக்க சென்றபோது தன் பையில் மறைத்து எடுத்துவந்த பெட்ரோல் கேனை வெளியே எடுத்தார்.

இதனைக் கண்ட அதிகாரிகள் திடுக்கிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆறுமுகத்திடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்தனர். இதையடுத்து ஆறுமுகத்திடம் விசாரணை செய்வதற்காக சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரையும் பரிசோதனை செய்த பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். போலீசார் சோதனையை மீறி முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேன் கொண்டு சென்ற சம்பவம் அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News